Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
காட்சி அற்புதம்
kāṭsi aṟputam
திருக்கோலச் சிறப்பு
tirukkōlach siṟappu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai
013. ஆற்றாக் காதலின் இரங்கல்
āṟṟāk kātaliṉ iraṅkal
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
2.
பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
3.
கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
4.
ஆரா அமுதாய் அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருஒற்றிப் பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
5.
துதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு
நதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார்
மதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
6.
எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை எற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திருவாழ் ஒற்றியினார்
அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் அணைத்தார் அல்லர் எனைமடவார்
தங்கள் அலரோ தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
7.
காவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார்
ஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி
தாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
8.
மலஞ்சா திக்கும் மக்கள்தமை மருவார் மருவார் மதில்அழித்தார்
வலஞ்சா திக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்ப்பதத்தார்
நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
9.
நாக அணியார் நக்கர்எனும் நாமம்உடையார் நாரணன்ஓர்
பாகம் உடையார் மலைமகள்ஓர் பாங்கர் உடையார் பசுபதியார்
யோகம் உடையார் ஒற்றியுளார் உற்றார் அல்லர் உறுமோக
தாகம் ஒழியா தென்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
10.
தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் தேடி வரும்அத் தீமதியம்
சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
11.
ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
ஆற்றாக் காதலின் இரங்கல் // ஆற்றாக் காதலின் இரங்கல்
No audios found!
Oct,12/2014: please check back again.